மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் தூக்கிட்டு தற்கொலை
மனைவி தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாத கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காதல் திருமணம் செய்த கணவரும் துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தகுமார். இவர் டிடிஎச் டிஷ் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதா (19) 9மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். திருமண நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக அமிர்தகுமாரின் சகோதரி மெர்சி ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டிற்கு வந்த போது நிறைமாத கர்ப்பிணியான நிவேதா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை மீட்டு பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதல் திருமண நாளான கடந்த ஞாயிறன்று தமது கணவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என கூறியும் அதனை மீறி அமிர்தகுமார் வேலைக்குச் சென்றதால் மன உளைச்சலில் இருந்த நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மனைவி நிவேதா இறந்த துக்கத்திலிருந்த அமிர்தகுமார் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி மனைவி இறந்த இரண்டு நாட்களில் கணவரும் மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.