தாமரைப்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் பள்ளிக் கட்டிடம்.. புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்…

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-12-23 04:00 GMT

பழுதடைந்த நிலையில் காணப்படும் பள்ளிக் கட்டிடம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10,000 மக்கள் வசித்து வருகின்றனர். தாமரைப்பாக்கம் கிராமம் பொள்ளாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள அரசு நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளிக்கு 3 கட்டிடங்கள் உள்ளன. அந்தக் கட்டிடத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த பள்ளியில் ஏற்கெனவே இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அந்தக் கட்டிடத்தை மூடப்பட்டு தற்போது இரண்டு கட்டிடத்தில் சுமார் 107 மாணவி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அந்த இரண்டு கட்டிடத்தில் ஒரு கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். அந்த கட்டிடத்தை ஏற்கெனவே பழுது பார்த்தும் பயனில்லாமல் தற்போது பள்ளியின் உள் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்துள்ளன.

கட்டிடத்தின் மேல் பகுதியில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்று மழை நீர் கசிந்தும், மழை நீர் உள்ளே வருவதால் மழைக்காலங்களில் மாணவர்கள் அமர்ந்து படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த கட்டிடம் மூடப்படுவது உண்டு.

மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தில் அனைத்து மாணவர்களும் அமர வைக்கப்படுவதால், அவர்களுக்கு போதிய இடம் வசதி இல்லாத நிலை உள்ளது. அனைவரும் ஒரே கட்டிடத்தில் அமர்ந்து படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, பழுதடைந்த இரண்டு கட்டிடங்களையும் அகற்றி புதிய கட்டிடங்களை கட்டித் தர வேண்டும் என்று அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களும், பெற்றோர்களும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் ஊராட்சியில் நடைபெறும் கிராமசப கூட்டத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரும் இந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டும் தற்போது வரையும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஆபத்து விளைவிக்கும் முன்பே மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பழுதடைந்த இரண்டு கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News