பழங்குடி மக்களுக்கான வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கம்
பொன்னேரி அருகே பழங்குடி மக்களுக்கு வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் காலங்காலமாக வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் வீடு கட்டித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 2.10 லட்சமும், வல்லூர் அனல் மின் நிலைய கூட்டாண்மை சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.50 லட்சம் என தலா 4.6 லட்சம் வீதம் 2.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 46 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து வைத்து, அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு மற்றும் வல்லூர் அனல் மின் நிலையம் இணைந்து வீடுகள் கட்டித்தரப்பட உள்ளதாகவும், 3 அல்லது 4மாதங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் வேலையில்லாத அவதிப்படும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.