சமையல் கூடம் அருகே தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
திருவள்ளூர் அரசு தொடக்கப்பள்ளி சமையல் கூடம் அருகே தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவு தயாரிக்கும் நவீன சமையல் கூடம் சேரும் சகதியுமாக இடத்தில் சுகாதார சீர்கேடாக உள்ளதால் மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும் என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட முகமது அலி தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்த காலை சிற்றுண்டி உணவு திட்டத்திற்கான நவீன சமையல் கூடம் கட்டப்பட்டது.
இந்த சமையல் கூடத்தில் தயாராகும் உணவுகள் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள ஒன்பது நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நகராட்சி தொடக்கப் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு அந்த கழிவுநீர் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகம் வழியாக நவீன சமையல் கூடம் பகுதியில் குட்டை போல் தேங்குகிறது.
இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மாணவர்களை கடிப்பதுடன் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. மாணவர்களுக்கு சமையல் செய்யும் உணவு கூடத்தில் இது போன்ற சுகாதார சீர்கேடு நிலவுவது பெற்றோர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து நவீன சமையல் கூடத்தை சுகாதாரமான சமையல் கூடமாக மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.