தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் முற்றுகை
சோழவரம் அருகே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் முற்றுகை போராட்டம்.
சோழவரம் அருகே பணியின் போது மாடு முட்டியதால் பலத்த காயமடைந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் கால்நடை விந்து சேகரிப்பு மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர் செங்குன்றம் அடுத்த அலமாதி உப்பரபாளையத்தில் உள்ள கால்நடை விந்து சேமிப்பு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 16.-ஆம் தேதி அன்று பணியில் இருந்த போது மாடு முட்டியதில் காயமடைந்த யுவராஜ் வேலைக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று எருமைவெட்டிப் பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் மாடு முட்டியதால் பலத்து காயமடைந்திருந்த யுவராஜ் உயிரிழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் கால்நடை விந்து சேமிப்பு மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவரம் காவல் துறையினர் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது