பீஸ்ட் படத்திற்கு டிக்கெட் வழங்க மறுப்பு: ரசிகர்கள் சாலை மறியல்
பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் காட்சிக்கு திரையரங்கம் சார்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படாததை கண்டித்து ரசிகர்கள் சாலை மறியல்.;
நாளை வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்வதாகவும் ரசிகர் மன்றத்திற்கு திரையரங்கம் சார்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படாததை கண்டித்து திரையரங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ரசிகர்கள் போக்குவரத்து பாதிப்பு.
நாளை 13ஆம் தேதி நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள ராக்கி திரையரங்கத்தில் 13ஆம் தேதி பீஸ்ட் திரைப்படமானது திரையிடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தேரடியிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராக்கி திரையரங்கத்தில் அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை விட கூடுதலாக 1000 ரூபாய் வைத்து பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதாகவும், ரசிகர் மன்றத்துக்கு டிக்கெட்டுகள் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் ரசிகர்களிடம் பேசியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து திரையரங்க நிர்வாகத்தினரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் ரசிகர்களுக்கும் திரையரங்க நிர்வாக மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு போதிய டிக்கெட் வழங்குவதாக திரையரங்க நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து சம்பவம் முடிவுக்கு வந்தது. மேலும் பீஸ்ட் பட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு பிளாக்கில் விற்கப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.