கூடுதல் பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே பழுதடைந்த பேருந்து பயணிகள் காத்திருக்கும் நிழல் கூடம் அகற்றி புதிய நிழல் கூடம் அமைக்க வேண்டும்

Update: 2023-04-16 05:00 GMT

ஊத்துக்கோட்டை அருகே பழுதடைந்த பேருந்து பயணிகள் காத்திருக்கும் நிழல் கூடம்

ஊத்துக்கோட்டை அருகே பழுதடைந்த பேருந்து பயணிகள் காத்திருக்கும் நிழல் கூடத்தை அகற்றி புதிய நிழல் கூடம் கட்டி தரவேண்டும். மேலும்  கூடுதல் பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை அடுத்த வேளகாபுரம் ஊராட்சியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மக்கள், தாங்கள் தேவைக்காக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுமார் 10. கிலோமீட்டர் ஊத்துக்கோட்டை அல்லது 18. கிலோமீட்டர் பெரியபாளையம் சென்று தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்வார்கள். இதேபோல் இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவி மாணவர்கள் மேல் படிப்பிற்காக ஊத்துக்கோட்டை, மாளந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று கல்வி பயின்று வருவார்கள்.

இந்த நிலையில் இப்பகுதியில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெரியபாளையம், ஆவாஜி பேட்டை, மாளந்தூர், வேளகாபுரம் வழியாக ஊத்துக்கோட்டை வரை 92.பி. ஒரு பேருந்து மட்டும் பல வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த கிராமத்தில் பயணிகள் காத்திருக்க நிழல் கூடம் ஒன்று 25.ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது இந்த நிழல் கூடத்தில் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே கொட்டி மேற்கூரையில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்து விளைவிக்கும் வகையில் நிழல் கூடம் மாறிவிட்டது. எனவே இந்த பழுதடைந்த நிழல் கூடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கூறுகையில் தாங்கள் பகுதியில் உள்ள நிழல் கூடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.இதனால் அதில் சென்று அமர்ந்து பேருந்துக்காக காத்திருப்பதில்லை.  அப்படி அமர்ந்திருந்த போது இரண்டு பயணிகள் மீது மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கொட்டி சிறு காயங்கள் ஏற்பட்டது. இதனால் வெயிலில், மழைக் காலங்களில் திறந்த வெளியிலே நின்று பேருந்தில் ஏறிச்செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் தாங்கள் பகுதிக்கு அரசு விழுப்புரம் போக்குவரத்துக் கழக பேருந்து 92.-பி ஒரு பேருந்து மட்டுமே நீண்ட வருடங்களாக வந்து செல்லும் நிலையில்,  சில நேரங்களில் சரியாக வருவதில்லை. அப்போது கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணம் செய்யும் நிலையும் உள்ளது. 

ஊத்துக்கோட்டையில் இருந்து கூடுதல் பேருந்துகளை இந்த வழித்தடத்தில் இயக்கி வைக்குமாறு பலமுறை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருதி தங்கள் கிராமத்திற்கு கூடுதலாக பேருந்து வசதியும் பயணிகள் காத்திருக்கும் நிழல் கூடத்தை அமைத்து தர வேண்டும் என்றனர்..




Tags:    

Similar News