பக்தர்களுக்கு போலி நுழைவுச்சீட்டு விற்ற மூன்று பேர் கைது
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் போலி நுழைவுச்சீட்டு விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய பவானிஅம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இங்கு விழா கோலம் பூண்டிருக்கும். கடந்த 21.ஆம் தேதி 5வது ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல பக்தர்கள் கோவிலுக்கு சென்ற நிலையில் ஒருவர் கொண்டு வந்த சிறப்பு நுழைவு சீட்டை கோவில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்ட போது அது போலி என தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது 5.பேர் கொண்ட குழுவாக பவானி அம்மன் ஆலயத்திற்கு வந்ததாகவும், விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு நுழைவு சீட்டை 1000.ரூபாய்க்கு கோவிலின் வெளியே ஒருவரிடம் இருந்து வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் போலி நுழைவு சீட்டை விற்பனை செய்த நபரை தேடி சென்ற போது அவர் பவானி அம்மன் கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஒப்பந்த ஊழியர் அருண்பாண்டியன் என்பது தெரிய வந்தது.
அவரிடம் இது குறித்து கேட்டபோது செயல் அலுவலரையும், கோவில் ஊழியரையும் அசிங்கமாக பேசி மிரட்டியுள்ளார். இது குறித்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டன விசாரணையில் கோவிலில் தற்போது பணியாற்றும் இருவர் கோவில் சிறப்பு நுழைவு சீட்டுகளை திருடி வந்து வெளியே வைத்து கொண்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து முன்னாள் ஒப்பந்த ஊழியர் அரியப்பாக்கத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (28), கோவிலில் தற்போது பணியாற்றி வரும் காவலாளிகளான பெரியபாளையத்தை சேர்ந்த வினோத் (33), வடமதுரையை சேர்ந்த தினகரன் (47) ஆகிய மூவரையும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டுதல், மோசடி உள்ளிட்ட 6பிரிவுகளின் கீழ் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.