விஷம் வைத்து தெருநாய்களை கொன்ற மர்ம நபர்..? போலீசார் விசாரணை..!

திருவள்ளூர் நகராட்சியில் தெரு நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-09-29 05:45 GMT

சிசிடிவி காட்சிகள் 

திருவள்ளூர் மாவட்ட நகராட்சிக்குட்பட்ட 12, மற்றும் 13,வது வார்டில் உள்ள ஜெயா நகர், காமாட்சி அவென்யூ,ஏ எஸ் பி நகர், செந்தில் நகர்,பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு  விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஏ.எஸ்.பி நகரில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் வளர்த்திருந்த சுமார் 10 நாய்களில் 8 நாய்கள் விஷம் வைத்த உணவை உண்ட சிறிது நேரத்திலேயே இறந்து விட இரண்டு நாய்கள் மட்டும் துடிதுடித்துக் கொண்டிருந்தன.

கார்த்திகேயன் அந்த இரண்டு நாய்களை எடுத்துக்கொண்டு சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள Barking Fine எனும் தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அதில் எட்டு மாதங்கள் நிரம்பிய சில்கி எனும் நாய் விஷத்தின் வீரியம் காரணமாக சிறுநீரகம் செயலிழந்து இறந்து விட்டது.பிரவுனி எனும் 11 மாதங்களான நாய் மட்டும் காப்பாற்றப்பட்டது. விஷ உணவை உண்ட நாய்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக துடிதுடித்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முட்பூதர்களில் இறந்து கிடந்துள்ளன.

நகராட்சியில் இருந்து தினமும் காலையில் தூய்மைப்பணி செய்பவர்கள் காருக்கு அடியில் நாய்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மிகவும் வீரியம் வாய்ந்த விஷத்தை உணவில் கலந்துள்ளதால் எல்லா நாய்களும் ரத்த வாந்தி எடுத்தும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் இறந்துள்ளன.

தனியார் கால்நடை மருத்துவமனையின் அறிக்கையிலும் விஷம் கலந்த உணவுதான் நாய்களின் இறப்பிற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விஷம் வைத்த நபர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒவ்வொரு பகுதியாக விஷம் வைத்து ஒரு மாத காலமாக நாய்களை கொன்றிருக்கிறார்.

கடந்த 21ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணி அளவில் ஒருவர் கையில் தூக்குச் சட்டியில் தெருவில் நாய்களுக்கு உணவளிப்பது அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் விஷம் வைத்த நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள்ளாக எல்லா நாய்களும் இறந்து கிடந்துள்ளன.

இரவு நேரம் என்பதால் அந்த நபரின் அடையாளம் சிசிடிவியில் உருவம் மட்டுமே தெரிகிறது. தெளிவான உருவம் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

நாய்கள் இவ்வாறு விஷம் வைத்து கொல்லப்பட்டதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை?கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாத இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News