ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அசைவ உணவு விற்க அனுமதி...!
அசைவ உணவு வகைகளை விற்பனை செய்ய அனுமதி என்றே அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம் நில அளவை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தாட்கோ, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளின் தீர்வுக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் திங்கள் கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மற்றும் முகாம்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அமைதிப் பேச்சுவார்ததை போன்ற நிகழ்வுகளுக்கு ஏராளமான பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொது மக்கள் அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 உணவகங்கள் மற்றும் ஆவின் பாலகம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை உணவகங்களில் சைவ உணவு வகைகளான தயிர் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம் பிரிஞ்சி சாதம், கேழ்வரகு களி போன்ற சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 3 வாரத்திற்கு முன்பு உணவகங்களில் அசைவ உணவகம் விற்பனை செய்ய மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் அனுமதி பெற்று பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு, முட்டை ஆம்லெட், சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி, கறி, கருவாட்டுக் குழம்பு ஆகியவற்றை விற்பனை செய்ய அதற்கான விலைப்பட்டியல் போர்டை உணவகம் முன்பு வைத்தனர்.
ஆனால் இந்த விலைப்பட்டியலில் பீப் பிரியாணி இடம் பெறவில்லை . இதனால் ஒரு தரப்பினர் அசைவ உணவான மாட்டிறைச்சியையும் பட்டியலில் சேர்த்து விற்பனை அனுமதி வழங்க வேண்டுமென ஆதிதிராவிட முன்னாள் நலக்குழு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அசைவ உணவகத்தில் பீப் பிரியாணியை சேர்த்து விற்பனை செய்ய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பீப் பிரியாணி என்று தனிப்பட்ட முறையில் அறிவிக்காமல் அசைவ உணவு வகைகளை விற்பனை செய்ய அனுமதி என்றே அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் அசைவ உணவக விலைப்பட்டியலில் பீப் பிரியாணி 100 ரூபாய் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்லக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைவ உணவு வகைகளையே அதிகம் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால் அசைவ உணவில் பீப் பிரியாணி விற்பனை செய்வது உறுதியாகும் பட்சத்தில் சைவ உணவு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை குறையும் என்றே கூறப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்ற மறைமுக அறிவிப்பு பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.