தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு : உரிமையாளர் கைது..!
திருவள்ளூர் அருகே காக்களூர் பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;
திருவள்ளூர் அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தொழில் பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் கணபதி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் நேற்று மாலை 4 மணி அளவில் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்த திருவள்ளூர் மற்றும் பேரம்பாக்கம் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் தொழிற்சாலையில் இருந்த ரசாயன பேரல்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வந்தனர்.
அந்த தொழிற்சாலையில் தொழிலாளர் யாரேனும் சிக்கிக் கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் மற்றொரு தொழிற்சாலையில் இருந்து பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சீனிவாசன் என்ற தொழிலாளர் மீது தீ விபத்து ஏற்பட்ட பெயிண்ட் தொழிற்சாலையின் இரும்புத் தகடு விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெயிண்ட் தொழிற்சாலையில் அக்கௌன்டண்ட் சோபனா என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன்பின்பு தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்த போது மூன்று சடலங்கள் கிடந்தன.
அவர்கள் பார்த்தசாரதி, புஷ்கர், சுகந்தி என்பது அடையாளம் காணப்பட்டது. அவர்கள் தீயில் எரிந்து எலும்புக்கூடான நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இன்று காலையில் மீண்டும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது மேலும் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பெயிண்ட் தொழிற்சாலையின் உரிமையாளர் கணபதி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் பிரபு ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காவல் துறையின் விசாரணையில் பெயிண்ட் தொழிற்சாலையில் மொத்தம் 6 பேர் பணிபுரிந்து வந்ததாகவும் சம்பவம் நடந்த நேற்று 2 பேர் விடுப்பில் இருந்ததால் 2 பெண்கள் 2 ஆண்கள் என 4 பேர் பணி செய்து கொண்டிருந்ததாகவும் அதில் அக்கவுண்டன்ட் ஷோபனா என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீதமுள்ள 3 பேர் அதாவது பார்த்தசாரதி, புஷ்கர் மற்றும் சுகந்தி ஆகியோர் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல் கருகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.