திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தேரினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேர் திருவிழா 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் 12ம் தேதி 48 அடி உயரமும், 21 அடி அகலமும் 75 டன் எடை கொண்ட திருத்தேர் பவனி நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேரின் மீது மின்கம்பி உரசியதில் தேர் தீ பிடித்ததில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் வீரராகவர் கோவில் சார்பில் தேர் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு அனைத்து துறைகளிலும் விண்ணப்பித்திருந்தனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் கோட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரஹாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர். நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர், நகராட்சி ஆணையர் பொறுப்பு கோவிந்தராஜ், தீயணைப்புத்துறை. பிஎஸ்என்எல். மின்சார துறை. மற்றும் வீரராகவர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் தேரடியில் அமைந்துள்ள தேரினை பார்வையிட்டு தேரின் பராமரிப்பை குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தேர் செல்லும் முக்கிய சாலையான பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.