பவானியம்மன் ஆடி திருவிழா : அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்..!
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.;
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பஸ், ஆற்றில் கொட்டகை அமைக்கக்கூடாது என ஆடித்திருவிழா குறித்து அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுயம்புவாக எழுந்தருளியே புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலின் ஆடித் திருவிழா வரும் ஜூலை 17 -ந் தேதி தொடங்குகிறது.இந்த திருவிழா தொடர்ந்து 14 வாரங்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து கார், பஸ்,வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்குவார்கள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மொட்டை அடித்து பொங்கல் மண்டபத்தில் பொங்கல் வைத்து, ஆடு கோழி என பலியிட்டு ஆலய வளாகத்தில் உள்ள வேப்பமரம் அடியில் படையல் இட்டு உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்தும் தங்களின் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். இந்த நிலையில் ஆடி திருவிழா தொடங்க உள்ளது.
ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும் அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன், டிஎஸ்பி கணேஷ்குமார், பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன், எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ், பவானி அம்மன் கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் , அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆடித் திருவிழாவின் போது சனி சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் சுகாதார பணியாளர்கள் கூடுதலாக பணியாற்றுவார்கள், சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் கோவிலுக்கு பக்தர்கள் வருவதால் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற வேண்டும்,கழிவறைகள் கூடுதலாக அமைக்கப்படும்,
மேலும் ஆடித்திருவிழாவிற்கு வரும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு தற்காலிக பஸ் நிறுத்தத்தில் இருந்து கோயில் வரை இலவச பேருந்து வசதி இயக்க ஏற்பாடு செய்யப்படும், ஆத்துப்பாக்கம்,ராள்ளபாடி, பெரியபாளையம், வடமதுரை கூட்டுச்சாலை பகுதிகளில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆரணியாற்றில் தற்காலிக கொட்டகைகள் அமைக்ககூடாது,ஆடி மாதத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லக்கூடாது,மேலும் பல்வேறு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது இதில் 14 வாரத்திற்கு ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி தலைமையில் 150 போலிசார், 50 ஊர்காவல் படையினர் என 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு போக்குவரத்து துறை, சுகாதார துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை , தீயணைப்பு துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.