3 நாட்கள் மின்சாரம் இல்லை..! கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இட்ட கிராம மக்கள்..!

3 நாட்கள் மின்சாரம் இல்லாமல் அவஸ்தைப்பட்டதால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

Update: 2023-07-14 03:45 GMT

மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் படும் அவஸ்தைகளை கூறும் பெண் ஒருவர்.

திருவள்ளூர் அருகே மூன்று நாட்களாக மின்சாரம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காலனி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு மாற்று சமூகத்தினர் வசிக்கும் சாலை வழியாக உயர் மின்னழுத்த கம்பி செல்கிறது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த மின்கம்பிகளில் ஒன்று அறுந்து கீழே சாலையில் விழுந்துள்ளது. இதனை அடுத்து அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த கம்பியை உடனடியாக சரிசெய்யும் பணியில் ஈடுபடுவதற்காக மின் வாரிய ஊழியர்கள் வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் எங்கள் பகுதி வழியாக காலனி பகுதிக்கு மின்சாரம் செல்லக்கூடாது. வேறு எந்த பக்கமாவது காலனிக்கு மின் சாரம் எடுத்துச்  செல்லுங்கள்.  அறுந்து விழுந்தது மின் கம்பியை சரிசெய்யக்கூடாது. என மின் வாரிய ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யமுடியாமல் சென்றுவிட்டனர். மின் கம்பி சரிசெய்யப்படாததால் காலனி பகுதியில் மூன்று தினங்களாக மின்சாரம் தடைபட்டு போனது. அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் இல்லாமல்  குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு முடியாமல் சிரமப் படுகின்றனர். காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு மின்சாரம் இல்லாமல் குடும்பப் பெண்கள் தவித்து வருகின்றனர். 

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச்  செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிப் பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்பட்டது. 

Tags:    

Similar News