மண் ஏற்றி வந்த லாரி மோதி பெண் உயிரிழப்பு..!
திருவள்ளூர் அருகே சவுடு மண் குவாரியில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்.
திருவள்ளூர் அருகே சவுடு மண் ஏற்றி செல்ல வந்த லாரி மோதி 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உயிரிழப்பு. உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த கைவண்டூரில் அரசு சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியை சேர்ந்த கர்ணன் மனைவி வள்ளியம்மாள் ( வயது-55) என்பவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கைவண்டூரிலிருந்து லாரி திருப்பாச்சூர் வழியாக சவுடுமண் அள்ளுவதற்காக
அந்த வழியாக சென்ற லாரி வள்ளியம்மாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் லாரியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனையடுத்து கிராம மக்கள் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் திருவள்ளூர்-கடம்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் உயிரிழந்த வள்ளியம்மாள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் திருப்பாச்சூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. கணவனை இழந்த வள்ளியம்மாள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தபோது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.