சுடுகாட்டு இடத்தை கோயில் இடமாக்க முயற்சி..! கிராம மக்கள் போராட்டம்..!

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாட்டு இடத்தை கோயில் நிலமாக எண்ணி பொக்லின் வாகனம் சுத்தம் செய்ததால் கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

Update: 2024-04-15 08:00 GMT

பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள் 

பெரியபாளையம் பவானியம்மன் கோயில் அருகில் சுடுகாடு வேண்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாகவும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும்  அறிவிப்பு வெளியிட்டனர். 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ரூ. 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கியது.

இந்நிலையில் கோயிலுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பழைய அரசு கட்டிடங்கள் இருந்தது. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணிகள் செய்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்ரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஆரணியாற்றின் கரையை உடைத்து சுடுகாட்டை சுத்தம் செய்தனர்.

இதையறிந்த கோயில் அருகே உள்ள  பவானி நகர் மற்றும் கனகவல்லி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றின் கரையை உடைத்து சுடுகாட்டை ஏன் சுத்தம் செய்கிறீர்கள்? அது எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறினர். இதையறிந்த கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் கிராமத்தினர், பல தலைமுறைகளாக நாங்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம். இது எங்களுக்குத்  தான் சொந்தம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த பொதுப்பனித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். அப்போது அவர்கள் சுடுகாடு குறித்து கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் , நாங்கள் ஆதார் கார்டு, ரேன்கார்டுகளை திருப்ப ஒப்படைத்து தேர்தலை புறக்கணிப்போம் என கூறி விட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News