திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் ரமேஷ் காந்த். இவரது மனைவி தேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கிறார். ரமேஷ் காந்தின் தாயார் கடந்த 7ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து அம்மாவின் துக்க நிகழ்ச்சிக்காக கனகம்மாசத்திரம் அடுத்த பணப்பாக்கம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்
இதனையடுத்து சடங்குகள் முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெளிப்புறக் தகவு மூடப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உள்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த 23.5 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், இரண்டு லேப்டாப்பை கொள்ளை போனது தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது, கடந்த 23ம் தேதி கண்காணிப்பு கேமராவை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரமேஷ் காந்த் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.