அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசு: வியக்க வைக்கும் திமுக
அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு 5 சவரன் தங்கச்சங்கிலி வழங்கப்படுமென திமுக எம்எல்ஏ திருத்தணி சந்திரன் அறிவிப்பு
அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிஷேசன், ஓ.ஏ.நாகலிங்கம், டாக்டர் வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், மிதுன்சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், கே.எம்.சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சி.சு.ரவி சந்திரன் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ பேசியதாவது: முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே அதனை ஏற்று திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியும், 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்கும் ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கும் தலா 2 சவரன் தங்கச் சங்கிலியும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பொற்கரங்களால் வழங்கப்படும் என்றார் அவர்
இதனைத் தொடர்ந்து அனைத்து பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைப்பது, திமுக ஆட்சியின் சாதனைகளை வீடுவீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து திண்ணைப் பிரசாரம் செய்வது, சமூக வளைதள பணிகளை கிளை கழகம் முதல் மாவட்ட கழகம் வரை அனைவரும் தீவிரமாக செயல்படுவது, சார்பு அணிகளை உடனடியாக அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய, நகர பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் முன்னாள் நகர மன்ற தலைவர் பொன்பாண்டியன் நன்றி கூறினார்.