கலைஞர் நகர் பகுதியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரியபாளையத்தில் குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2022-10-25 06:00 GMT

குப்பைகளை அகற்றாததால் அவற்றை கிளறிப்போடும் பன்றிகள்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஜார் பகுதியில் சில இடங்களிலும் மற்றும் பெரியபாளையம் கலைஞர் நகர் கிழக்கு சிறிய பாலம் அருகே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து தேவையில்லாத குப்பைகளை கொண்டு சென்று அங்கு வைத்துள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுவார்கள். ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை காவலர்கள் காலையில் நாள்தோறும் குப்பைகளை எடுத்து செல்வது வழக்கம்

ஆனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகளை அகற்றாததால் குப்பைத் தொட்டி நிரம்பி வழிகிறது. அப்பகுதி மக்கள் குப்பைத்தொட்டியின் அருகிலே குப்பைகளை கொட்டி செல்வதால், அங்கு சுற்றித் திரியும் பன்றிகள் மற்றும் மாடுகள், நாய்கள் என குப்பைகளை கிளறுகின்றன. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது

மேலும் காற்றில் சற்று அதிகமாக வீசினால் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பைகள் அருகாமையில் சின்னம்பேடு ஏரிக்குச் செல்லும் கால்வாயில் சென்று விழுகிறது. இதனால் கால்வாய் மாசடைகிறது.

இது குறித்த பகுதி மக்கள் சிலர் கூறுகையில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை தொட்டிகள் அமைத்தும் வீடுகளில் இருந்து நாங்கள் கொட்டும் குப்பைகளை நாள்தோறும் அள்ளி செல்வது வழக்கம் ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாகவே ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் வராததால் குப்பைகள் தேங்கி கீழே விழுந்து, அவற்றை பன்றிகள் மாடுகள் உள்ளிட்டவை உணவு தேடி கிளறுவதால் அதில் துர்நாற்றம் வீசுகிறது

மேலும் மழை காலம் என்பதால் அந்த குப்பைகளில் கொசுக்களும உற்பத்தி ஆகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைமை பலமுறை நடந்திருப்பதாகவும், தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டிய பணியாளர்கள் நான்கு நாளுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை என வந்து செல்வதால் குப்பைகள் தேங்கி விடுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே தற்போதாவது பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொண்டு நாள்தோறும் அப்பகுதியில் தூய்மை பணியாளர்களை அனுப்பி இந்த குப்பைக் கழிவுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைஞர் நகர் பகுதி குடியிருப்பு வாசிகளும். பஜார் பகுதி குடியிருப்பு வாசிகளும். பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News