ஒரிசாவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒரிசாவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-21 23:45 GMT

கஞ்சாவுடன் கைதானவர்கள். 

திருவள்ளூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரகசியத் தகவல்  கிடைத்தது. அதன் தகவலின் பேரில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு மற்றும் காவல்துறையினர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,  சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த 3 பேரை மடக்கி,  சோதனை செய்தனர். அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது,  அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பத்மனாபோயி, தனஞ்ஜெய கரியா, ஹரி ஹர பாகா என்பது தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். 3 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News