குடியிருப்புக்குள் இயங்கும் மாவு மில்லை மூடக்கோரி தற்கொலை முயற்சி..!

திருத்தணி அருகே குடியிருப்புக்குள் இயங்கும் மாவு மில்லை மூடக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தவரை போலீசார் தடுத்தனர்.

Update: 2024-06-06 02:00 GMT

போலீசார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ள இருந்த ஏழுமலையை தடுத்தனர்.

மாவு மில்லை மூடக்கோரி புகார் செய்தும் மெத்தனமாக நடந்து கொள்வதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஏழுமலை என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மா பேட்டை ஊராட்சியில் வசித்து வருபவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பாபு. இவரது மனைவி யசோதா என்பவர் சின்னம்மா பேட்டை ஊராட்சியில் மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. மாவு அரைக்கும் போது இதிலிருந்து வரும் சத்தம் அதிகப்படியாக இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் நிம்மதியாக வசிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மாவு மில்லை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த மாவு மில் அமைந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள குடியிருப்பு வாசி ஏழுமலை தேவகி ஆகியோர் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்திருந்தனர். 

அந்த புகார் மனுவில் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் மாவு மில் இருப்பதாகவும் இதிலிருந்து வரும் சத்தத்தால் அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என்றும் மேலும் குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியவில்லை என்றும், மிகவும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அதிகப்படியான சத்தம் வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேவகியின் கணவர் ஏழுமலை ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். 

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை ஏழுமலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏழுமலையின் தற்கொலை செய்யும் முயற்சியை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏழுமலையிடம் சமரசம் பேசி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்ததை அடுத்து ஏழுமலை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் கைவிடப்பட்டது. இதேபோன்று கடந்த வாரம் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News