திருவள்ளூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து காயமடைந்தவர் மரணம்

மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் கால் துண்டானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Update: 2023-04-06 04:45 GMT

பைல் படம்

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் கால் துண்டானவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சாதிக் அலி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தனது சகோதரர் அப்துல்லா நடத்தி வரும் பட்டாசு உற்பத்தி செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் 118.வது ஜாத்திரை திருவிழாவிற்காக கோவில் நிர்வாகத்தினர் பேரம்பாக்கம் அப்துல்லா என்பவரிடம் பட்டாசு ஆர்டர் கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரம்பாக்கத்தில் இருந்து சுமார் ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை சாதிக் அலி, திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி  ஆகிய இருவரும் எடுத்துக் கொண்டு  திருவிழா நடைபெறும் இடத்துக்குச்சென்று பட்டாசு மூட்டையுடன் காத்திருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு மூட்டை பயங்கரமாக வெடித்ததில், சாதிக் அலியின் இடது கால் துண்டாகி உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்தார். அவருடன் நின்று கொண்டிருந்த சிரஞ்சீவியும் லேசான தீக்காயம் அடைந்தார். 

இருவரையும் கிராமத்தினர் மீட்டு, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சாதிக்அலி  சிகிச்சை   பலனின்றி உயிரிழந்தார். கோவில் ஜாத்திரை திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் போளிவாக்கம் கிராமத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இச்சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தந்தையின்றி மூன்று குழந்தைகளும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News