விஷவாயு தாக்கி இறந்து போன இரண்டு குடும்பத்தினருக்கும் நிதி உதவி - பணி ஆணை வழங்கல்
பள்ளிக்கூடங்கள் தொழிற்சாலைகள் நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல் கட்டமாக தலா ரூ.11 லட்சம் நிதியுதவியும், பணி ஆணையை தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் ம.வெங்கடேசன் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தை தொடர்ந்து அந்த தனியார் பள்ளியை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர துய்மை பணியாளர் கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.36 லட்சத்தில், தற்போது முதல் கட்டமாக ரூ.11 லட்சம் நிவாரண நிதியும், அவருடைய மகன் கார்த்திகேயனுக்கு, ஆரணி பேரூராட்சியில் வரி தண்டலராகவும், பணி ஆணை வழங்கப்பட்டது.
அதேபோல் சுப்பராயலுவின் குடும்பத்திற்கு ரூ.32 லட்சத்தில் தற்போது முதல்கட்டமாக ரூ.11 லட்சம் நிவாரண நிதியும் அவருடைய மகன் மகேஷுக்கு மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராகவும் பணி நியமன பணி ஆணையை தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் ம.வெங்கடேசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவர் தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் ஜாமினில் வெளிவராத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனே கைது செய்யப்பட்டு இருப்பதாகவும். மேலும் சிலரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க தூய்மை பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் தொழிற்சாலைகள் நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
தனிப்பட்ட ஆளாக தூய்மை பணியாளரை தொடர்பு கொண்டு அழைக்கக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆணையர்களை தொடர்பு கொண்டு கழிவு நீர்களை அகற்றுவது தொடர்பாக பேச வேண்டும்.
மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கோ அகற்றுவதற்கு இயந்திரம் கொண்டு வந்தால் 90% உயிரிழப்புகளை தடுக்கலாம். இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் 2013 சட்டத்தின் படி இயந்திரங்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிமுறை விதித்திருக்கிறது. உச்சநீதிமன்ற ஆணைப்படி இயந்திரம் மூலம் எடுக்க முடியாத கழிவுகளை விஷவாயு உள்ள கழிவு நீர்களில் ரசாயன பவுடர்கள் தெளித்து பின்னர் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த பணி வழங்குவதை ஒழித்து நிரந்தர பணி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் அலுவலகத்தை மாநில அளவிலும் அலுவலகம் உருவாக்க ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்திக்கிறேன். இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.