விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி
ஊத்துக்கோட்டை நடைபெற்ற ஆறு வழிச் சாலை ஆலோசனை கூட்டத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பங்கேற்றார்
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், எக்காரணம் கொண்டும் மக்கள் நம்ப வேண்டாம். அவர்கள் உங்களை முட்டாள்கள் ஆக்,கி உங்களுடைய ஓட்டுகளை வாங்கிக் கொண்டு, உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை நடைபெற்ற ஆறு வழிச்சாலை விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேசினார்.
தச்சூர் முதல் சித்தூர் வரை 116 கி.மீ. தூரம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஆறு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது அதற்காக, 1238 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றது ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, சித்தூர் ஆகிய இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்மேடு கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவசாயி ரமேஷ் தலைமை வகித்தார். சசிகுமார், விஜய பிரசாத், ஹரிதாஸ், பலராமன், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கலந்து கொண்டு பேசியபோது, இந்த ஆறு வழிச்சாலையை தடுத்து நிறுத்த விவசாயிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்காலிக தடை உத்தரவு வாங்க வேண்டும். அதற்கு விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து வழக்கு தொடர முன்வர வேண்டும் . அரசியல்வாதிகளையும், மற்றும் அரசு அதிகாரிகளையும் எக்காரணக் கொண்டும் நம்ப வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள். உங்களுடைய ஓட்டுகளை வாங்கிக் கொண்டு உங்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள். அனைத்து விவசாயிகள் ஒற்றுமையோடு முன்வந்து வழக்கு தொடர்ந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.