காலை, மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்..!
பெரியபாளையம், பொன்னேரி இடையே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில், ஜன்னல் கம்பிகளை பிடித்து ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் அரசு ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில். பெரியபாளையம், மங்கலம், காரணி, புதுப்பாளையம், கொம்பு ரெட்டி கண்டிகை,ராள்ளபாடி, உள்ளிட்ட கிராம பகுதிகளை சார்ந்த மாணவி, மாணவர்கள் ஆரணியில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல் பொன்னேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் பெரியபாளையத்திலிருந்து பொன்னேரி செல்லும் பேருந்துகளில் காலை, மாலை என இரு நேரங்களிலும் பயணித்து வருகின்றனர்.
பள்ளி கல்லூரிக்குச் செல்லும்போதும் மாலை வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி கலோரி விட்டு வரும் மாணவ. மாணவிகள் மற்றும் வேலை முடித்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் என மொத்த கூட்டமும் ஒரு பேருந்தில் வருகின்றனர்.
மாலை வீடு திரும்பும் மாணவர்கள் கூட்டம், மற்றும் தொழிற்சாலை மற்றும் அரசு வேலைகளுக்கு, கூலி வேலைகளுக்குச் சென்று வரும் பொதுமக்கள் கூட்டம் பஸ்ஸில் நிரம்பி வழிகிறது. மேலும் கூட்ட நெரிசல் காரணமாக சில பேருந்துகள் நிறுத்தாமல் சென்றுவிடுகின்றனர். நிறுத்தும் சில பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படியும், ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியும் சில நேரங்களில் பேருந்தின் கூரை மீதும் ஏறி பயணம் செய்கின்றனர்.
கரணம் தப்பினால் மரணம் என்று பயணம் செய்து வரும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்துக்கு மாவட்ட நிர்வாகமும் அரசு பேருந்து நிர்வாகமும் கூடுதல் பேருந்துகளை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பேருந்து இல்லாமல் இதுபோன்ற பயணத்தினால் மாணவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. எனவே மாணவர்கள் நலனைக் கருதி பெரியபாளையம்- பொன்னேரி இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.