சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ போராட்டம்
திருவள்ளூர் அருகே சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சி மதுராகண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் சென்னாவரம் ஏரியில் சவுடுமண் அள்ள தனியாருக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஏரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது. இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் கிராம மக்கள் திரண்டு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை சிறைப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கிராம ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் சரிந்து குடிநீர், விவசாயம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் குறிப்பாக எங்கள் கிராமத்தில் இருந்து திருவள்ளூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர இந்த ஒரு சாலை மட்டுமே உள்ளதால் ஏரியில் இருந்து சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளால் இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மேலும் பள்ளி நேரங்களில் இவ்வழியாக செல்வதால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் என தெரிவித்தனர்.
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கொளுத்தும் வெயிலிலும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி , உயர் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத்ள்ள தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.