தமிழக ஆளுநரை கண்டித்து ஆரணியில் திமுக ஆர்ப்பாட்டம்...
தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஆரணியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை மரபுகளை மீறியதாக ஆளுநர் ஆர்.என். ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும் மாநிலம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூர் நகர திமுக சார்பில் நகர செயலாளர் முத்து தலைமையில் ஆரணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி காவல் நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு வாணன், நிர்வாகிகள் வெங்கடேசன், கண்ணதாசன், கரிகாலன், கோபிநாத், நிலவழகன், கலையரசி, முனிவேல், தமிழ் அழகன், ஜெயக்குமார், பாலகுருவப்பா, பார்த்திபன், தமிழ் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதேபோல, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திமுக சார்ந்த பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் கண்டித்து வாசகங்கள் அடங்கியை பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.