திருவள்ளூரில் கொரோனா விதிகளை மீறி 3 கடைகளுக்கு சீல்
திருவள்ளூர் பஜார் வீதியில் கொரோனா விதிகளை மீறிய 3 நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொற்று அதிகம் பாதிக்கும் மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக காலை 10 மணி வரை கடை திறந்திருக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பஜார் வீதியில் காய்கறிக்கடை, மளிகை கடை திறந்திருப்பதால் திருவள்ளூர் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்து பொருட்களை வாங்க செல்கின்றனர்.
கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர் சார்பில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனைக்கு பிறகே மார்க்கெட் பகுதிக்குள் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவல்துறையினர் சார்பில் வியாபாரிகளும் கூட்டம் கூட அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் காவல்துறையினரின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் 3 மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.