ரசாயன கிடங்கில் வெளியேறும் நச்சுப் புகையை கட்டுப்படுத்தும் பணி: ஆட்சியர்ஆய்வு

பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-05-03 03:30 GMT

செங்குன்றம் அருகே தனியார் ரசாயனக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சு புகையை கட்டுப்படுத்தும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

செங்குன்றம் அருகே தனியார் ரசாயனக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சு புகையை கட்டுப்படுத்தும் பணிகள் 10மணி நேரமாக நீடிப்பு. விட்டுவிட்டு மழை வருவதால் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாயாசம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோன் அமைந்துள்ளது. கழிவறைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ப்ளீச்சிங் பவுடர், குளோரின் உள்ளிட்ட வேதி பொருட்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் இந்தக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. நள்ளிரவில் நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் அதிகாலை முதல் இந்த ரசாயன குடோனில் இருந்து தீ வெள்ளை நிற நச்சுப் புகை வெளியேறி சுற்றுப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.

தீ விபத்தால் சேதமடைந்த ரசாயன பொருட்களை பள்ளம் தோண்டி மண்ணில் புதைத்துளள நிலையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழையால் மண்ணில் புதைக்கப்பட்ட இரசாயன பொருட்களில் தண்ணீர் கலந்து வெள்ளை நிற நச்சுப் புகை வெளியேறுவதால் இந்த பகுதியில் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் செங்குன்றம் காவல்துறையினர் மண்ணில் இருந்து புகை வரும் ரசாயன பொருட்களின் மீது ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மண் அள்ளி கொட்டி மூடும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேதி பொருட்கள், சுண்ணாம்பு உள்ளிட்டவற்றை மண்ணில் புதைத்துள்ள பொருட்களுடன் கலந்து வேதி தன்மையை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவ்வப்போது மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10மணி நேரத்திற்கும் மேலாக நச்சு புகையை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் முற்றிலுமாக மண்ணில் புதைந்துள்ள வேதி பொருட்களுடன் சுண்ணாம்பு உள்ளிட்டவற்றை கலக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மண்ணில் புதைந்துள்ள பிளீச்சிங் பவுடர், குளோரின் உள்ளிட்டவற்றுடன் முழுமையாக சுண்ணாம்பு கலந்த பின்னரே புகை முழுமையாக கட்டுப்படுத்த இயலும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு தெரிவித்தார்.

விட்டுவிட்டு மழை வருவதால் மீண்டும் புகை வெளியேறாமல் இருப்பதற்காக தார்பாய் கொண்டு தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த கிடங்கில் இருந்து புகை வெளியேறுவது ஏறக்குறைய கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் மழை நீர் மீண்டும் வேதி பொருளுடன் கலந்தால் புகை வெளியேற வாய்ப்புள்ளது.

இதனிடையே சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கிடங்கில் உள்ள வேதி பொருட்களின் தன்மை, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தனியார் ரசாயனக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சு புகையை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் புகை வெளியேற்றம் என்பது முழுமையாக கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். கிடங்கு முழுவதும் டென்ட் அமைத்து மழைநீர் கிடங்கிற்குள் விழாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், புகை வெளியேறுவதை முதலில் கட்டுப்படுத்தி அடுத்த கட்டமாக நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் . பொதுமக்களுக்கு யாருக்கும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மண் மற்றும் சுண்ணாம்பு கலவைகளை கலந்து முற்றிலுமாக புகையை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News