மோசடி செய்து சொத்து அபகரிப்பு: மகன் மீது தாய் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வங்கியில் கடன் வாங்கப் போவதாக பொய் சொல்லி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி தனது சொத்தை அபகரித்ததாக புகார்

Update: 2023-03-07 03:00 GMT

திருவள்ளூர் அடுத்த திருமுல்லைவாயலில் ரூ.25 லட்சம் மதிப்பிலான  வீட்டை அபகரித்த  காவல்துறை உதவி ஆய்வாளராக  இருக்கும்  மகன் மீது மாவட்ட கலெக்டரிடம் மூதாட்டி புகார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை, தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளராகப்பணியாற்றி வரும் மூத்த மகன் தன்னிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கி அபகரித்ததாகவும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்  மூதாட்டி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழன் நகரில் வசித்து வருபவர் ஆர்.சுகுணா. 72 வயது மூதாட்டியான இவரது கணவர் ராஜகோபால் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்று 1995 -ல் உயிரிழந்தார்.

இவர்களுக்கு தமிழ்செல்வம், ரவீந்திரன், ரகுநாதன் என்ற 3 மகன்களும், ராஜேஸ்வரி என்ற ஒரு மகளும் உள்ளனர். கணவர் இறந்த பிறகு அவருக்கு ஓய்வுபெற்ற போது  கிடைத்த  பணத்தில் திருமுல்லைவாயல் சோழன்நகர், பல்லவன் தெருவில் வீட்டைக் கட்டி அதில் 25 ஆண்டுகளாக மூதாட்டி சுகுணா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் தங்கியிருந்த வீட்டை பூட்டி விட்டு, இனி இந்த வீட்டில் இருக்க கூடாது.

இது எனது சொத்து எனக் கூறி பெற்ற தாய் என்றும் பாராமல் வெளியேற்றியுள்ளார். இதனையடுத்து 3-வது மகன் ரகுநாதன் வீட்டில் வசித்து வரும் மூதாட்டி சுகுணா, பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சொத்து சம்பந்தமாக வில்லங்கம் பார்த்த போது கடந்த 2017-ல் தாயார் சுகுணா பெயரில் உள்ள சொத்து மூத்த மகன் தமிழ்செல்வம் பெயரில் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இது குறித்து மகனிடம் கேட்டதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன் தமிழ்செல்வம் உடனடியாக மனைவி வேண்டாமதி (இவரும் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்) பெயரில் மாற்றி பதிவு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சுகுணா கடந்த 2022 ஏப்ரல் மாதம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். ஆனால் விசாரணை முடிவில் மகன் தமிழ்செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பு அமைந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து உண்மை நிலையினை மறுசீராய்வு செய்து மகன் பெயரில் பத்திரப்பதிவு ஆனதை ரத்து செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட தன்னை வாழ வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மூதாட்டி சுகுணா மாவட்ட கலெக்டரிடம் மூதாட்சி சுகுணா புகார் அளித்தார்.

வங்கியில் கடன் வாங்கப் போவதாக தவறான தகவலை சொல்லி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதன் மூலம் தனது பெயரில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாகவும், தமிழ்நாடு காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகவும், முன்னாள் முதல்வர் ஓபிஸ்-க்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பிரிவிலும் பணியாற்றி வரும் மகன் தமிழ்செல்வத்திற்கு பல்வேறு இடங்களில் சொத்துகள் உள்ளது. இருந்தும் எனது கணவர் சம்பாதித்த பணத்தில் கட்டிய வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுத்து, பத்திரப்பதிவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் மூதாட்டி சுகுணா தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக மூதாட்டி தெரிவித்தார்.


Tags:    

Similar News