மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு
கடம்பத்தூரில் கோவில் திருவிழா வில் பேனர் வைக்கும் போது மின் கம்பியில் உரசிமின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தார்
திருவள்ளூர் அருகே கோவில் விழாவில் பேனர் வைக்கும்போது உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மும்முடிக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சதீஷ் என்கின்ற சதீஷ்குமார் ( 20). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்த நிலையில் மும்முடிக்குப்பும் காலணியில் உள்ள பழண்டி அம்மன் கோவிலில் ஆடி மாத கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சதீஷ் தனது நண்பர்களுடன் கோவிலில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து கோவில் அருகில் டிஜிட்டல் பேனர்களை வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமார் பேனரை எடுத்து கட்டும் போது கைக்கு எட்டும் தூரத்தில் மேலே இருந்த மின்கம்பியில் அந்த பேனரில் உள்ள இரும்பு ராடு எதிர்பாராத விதமாக உரசியதில் இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் உயிருக்கு போராடினார்.
இதை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த பகுதி மக்கள் கூறியதாவது: வயலூர் கிராமத்தில் விளை நிலங்களிலும், கிராம பகுதிகளிலும் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பிகள் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பிகள் அவ்வப்போது லேசான மழை, காற்று வீசும் பொழுது அருந்து கீழே விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன. கோவில் அருகில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த மின் கம்பியை மின்வாரியம் சரி செய்யாத காரணத்தினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது,. இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
திருவிழாவில் கலந்து கொண்டு டிஜிட்டல் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் மும்முடிக்குப்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.