முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய ஆட்சியர்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமிக்கு மருத்துவ செலவுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி தான்யாவின் பிறந்த நாளை முன்னிட்டுதனது இருக்கையில் அமர வைத்து, கேக் வெட்டி, மாவட்ட ஆட்சியர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் மருத்துவ செலவுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் - சௌந்தர்யா தம்பதியினர். இவர்களின்10 வயது மகள் தான்யா.3 வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தான்யாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்தக் கட்டி எனப் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள அது நாளடைவில் பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு மாறியது. இதனையடுத்து பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர்.
ஆனாலும் நாளுக்கு நாள் நோய் அதிகரித்து அதன் பாதிப்பால் அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியை சிதைத்துவிட்டது. மகளின் சிகிச்சைக்காக பலரிடமும் கடன்பெற்று மருத்துவமனைகளில் சிகிச்சையை தொடங்கிய பெற்றோருக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியாத சூழல் ஏற்பட்டது.
அப்போது அந்த சிறுமி தான்யா முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையே ஏற்று, உடனடியாக தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 10 பேர் கொண்ட மருத்துவக் குழு இந்த அறுவை சிகிச்சையை முடித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி தான்யாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தான்யா தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி தான்யாவை நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரவைத்து பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சியளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி மூலம் சிறுமியின் மருத்துவ செலவுக்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும் தான்யாவின் பெற்றோரிடம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
இதற்து சிறுமி தான்யா மற்றும் அவரது குடும்பத்தார் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.