விவசாய நலன்களை காத்த பெருமைக்குரியவர் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் பெருமிதம்
பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
இந்தியாவிலேயே விவசாயிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி விவசாய நலன்களை காத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. பெருமிதம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக குறைந்தபட்ச விலை ஆதரவு (ராபி பருவம் 2022-23) திட்டத்தின்கீழ் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
பின்னர் 3 விவசாயிகளுக்கு நெல் விளைபொருளுக்காக ரூ5.லட்சத்து 10, ஆயிரம் மதிப்பீட்டில் பொருளீட்டுக்கடன் பெற்றதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளையும் 3 உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்படுவதற்கான அனுமதி ஆணைகளையும், 2 விவசாயிகளுக்கு பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் வழங்கினார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள பச்சை பயிறு மூட்டைகளை எடை மற்றும் ஈரப்பதம் அளவீட்டு கருவி மூலம் பரிசோதனை செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். அவர்கள் இல்லையென்றால் நமக்கு உணவும் இல்லை நம் நாட்டிற்கு வருவாயும் இருக்காது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் இங்கு நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஆகவேதான் தமிழக முதல்வர் விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்திருந்ததால் தான் அவர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உழைப்பு வீணாகாமல் முழுமையாக பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி செய்வோர் பாதிப்பு இல்லாமலும், நுகர்வோர் பயம் போக்கும் வகையிலும் இந்நிலையம் துவங்கப்படுகிறது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி அவர்களின் நலனை காத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும் என்பதில் பெருமிதம் கொள்வதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர், இரா.சீனிராஜ், காஞ்சிபுரம் விற்பனை குழு செயலாளர், இரா.சேரலாதன் உட்பட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.