முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து கவர்னர் குறித்து பேசவேண்டும்: குஷ்பு
2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மீண்டும் பாஜக மோடி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றார் குஷ்பு
திருவள்ளூர் பஜார் வீதியில் பா.ஜ.க.வின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அஸ்வின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சுந்தர் பங்கேற்று பா.ஜ.க.வின் 9 சாதனைகளை விளக்கி பேசியதாவது: வருகிற 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மீண்டும் பாஜக மோடி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும். அதே போல் தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் 2026 ல் பா.ஜ.க. ஆட்சி அமையும்.
48 கோடி வங்கி கணக்கை பயனாளர்களுக்கு தொடங்கி ஊழல் எதுவும் இன்றி 29 லட்சம் கோடி ரூபாயை நேரடியாக வங்கிகளில் செலுத்தியது பாஜக அரசு. இதில் ஊழல் நடந்துள்ளது என ஒருவரும் மோடி அரசின் மீது விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது. 11 கோடி கழிப்பறைகளை பெண்களின் சுயமரியாதையை காக்கும் விதமாக கட்டிக் கொடுத்துள்ளார். மணமகன் வீட்டாரிடம் யாரும் வரதட்சணை குறித்து பேசுவதில்லை. மாறாக கழிப்பறை இருக்கிறதா என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
திராவிடம் மாடல் ஆட்சி சுயமரியாதை காப்பதாக கூறுகிறது. ஆனால் பெண்களின் சுயமரியாதை எது என்று பெண்களுக்கு தெரியும்.. வீடின்றி யாரும் நாட்டில் இருக்கக் கூடாது என நான்கு கோடி வீடுகளை கட்டித் தந்தவர் நமது பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தை தொங்கும் முன்னரே இது முடியாது என்று கூறிய எதிர்கட்சிகளுக்கு மத்தியில் அதை செய்து காட்டிய சாதனைக்கு சொந்தக்காரர் மோடி. இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றி சாதித்தவர் .
இந்தியாவின் வளர்ச்சி வரி செலுத்துபவர்கள் மூலமாக நடைபெறுகிறது. தனியாருக்கு விமான நிலைய பராமரிப்பு, ரயில் நிலைய பராமரிப்பு போன்றவற்றை கொடுப்பதால், அவை மேலும் சிறப்பாக செயல்படுகின்றன. மக்களை காப்பாற்ற பல விஷயங்கள் உள்ளது. நம் வீட்டில் வேலை செய்ய வெளி ஆட்களை நியமிப்பது போலத்தான் தனியார் மயம். 2026 இல் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்கள் ஆசை. அது எப்படி தவறாக இருக்கும். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்.
பாஜக வளர்ச்சி குறித்து கேட்டதற்கு முன்பெல்லாம் பத்திரிகைகளில் ஐந்தாம் பக்கத்தில் சிறிய செய்தியாக பாஜக செய்திகள் இடம் பெறும். ஆனால் இன்று தலைப்புச் செய்தியாக வருவது இதன் வளர்ச்சியை காட்டுகிறது என்றார் குஷ்பு.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அறிவாலய அடிமைகள் என ஊடகத்துறையினர் குறித்து அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, மோடியின் அடிமை ஊடகங்கள் என எதிர்க்கட்சிகள் பேசும்போது மட்டும் ஊடகத்துறையினர் அதை அவமானமாக எண்ணுவதில்லை ஏன் என்று பதில் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திலிருந்து டெல்லிக்கு போனால் ஊடகத்துறையினருக்கு ரோஷம் போய் விடுகிறது. எஸ்வி சேகர் குறித்து பேச ஒன்றுமில்லை. தமிழகத்தில் உள்ள மூத்த பாஜகவினருக்கு நல்ல மரியாதை கிடைத்துள்ளது . ஆளுநர் அமைச்சர் போன்ற பதவிகளில் அவர்கள் இருப்பதே இதற்கு சான்று. எஸ்வி சேகர் பற்றி அண்ணாமலை பேசுவதில் தவறில்லை.
நாட்டில் ஏற்படும் கலவரங்கள் குறித்து பிரதமர் மோடி பதில் வேண்டிய அவசியம் இல்லை. தற்கு பதில் கூற நாங்கள் இருக்கிறோம். 2014க்கு முன் இந்தியாவில் மதக்கலவரம் அதிகம் . சாராய சாவு 10 மணிக்கு மேல் சைக்கிள்களில் கூட சாராயம் விற்கப்படுகிறது. காசு வந்தால் போதும் என்ற கொள்கையுடன் தமிழக ஆட்சி நடக்கிறது . 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதை முன்னாள் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கூறியதே இதற்கு சாட்சி. முதல்வர் -ஆளுநர் மோதல் குறித்த கேள்விக்கு ஆளுநர் நிலையை உணர்ந்து தமிழக முதலமைச்சர் யோசித்துப் பேச வேண்டும் என குஷ்பு தெரிவித்தார்.