அண்ணா, கருணாநிதி, அன்பழகன் சிலைகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்
பொன்னேரி அருகே அண்ணா,கலைஞர், அன்பழகன் ஆகியோரது மாதிரி சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
மீஞ்சூர் அருகே சிற்பக் கூடத்தில் தயாராகி வரும் விபி சிங், கலைஞர், அண்ணா, அன்பழகன் ஆகியோரது உருவச் சிலைகளின் மாதிரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை என பல்வேறு சிலைகள் இந்த சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிலைகள் இந்த சிற்பக் கூடத்தில் தயாராகி வருகின்றன.
இந்த சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவுவதற்காக தயாராகி வரும் பேராசிரியர் அன்பழகன் சிலையின் களிமண் மாதிரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். களிமண் மாதிரியால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைகளின் மாதிரிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து சிற்பிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதனையடுத்து பிலாஸ்டர் ஆப் பாரீஸ் இறுதியாக வெண்கலத்தில் சிலைகள் தயாராக உள்ளன. வி.பி.சிங் முழுஉருவ 9அடி வெண்கல சிலை மாநில கல்லூரியிலும், 3.5 அடி உயர வெண்கல கலைஞர், அண்ணா சிலைகள் நினைவிடங்களில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர் எம், எஸ்,கே,ரமேஷ் ராஜ், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.