பெரியபாளையம் அருகே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம்
பெரியபாளையம் அருகே ஆரிக்கம்பட்டு கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் அடித்து செல்லப்பட்டது.;
பெரியபாளையம் அருகே ஆரிக்கம்பட்டு கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சியை சேர்ந்து ஆரிக்கம்பட்டு கிராமம். இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. எனவே, இக்கிராமத்தில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றது. இவ்வாறு பயிரிடப்படும் பொருட்களை விவசாயிகளும், பொதுமக்களும் செங்குன்றம், சென்னை-கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராமத்தில் இருந்து பூச்சிஅத்திபேடு, செங்குன்றம், மாதவரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ரூ.40 லட்சம் செலவில் 20அடி அகலம், 50அடி நீளம் கொண்ட மேம்பாலம் ஒன்றை கட்டினர். இந்த மேம்பாலம் தரம் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.
இந்நிலையில்,மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக பூண்டி ஏரியின் உபரி நீர் கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆரிக்கம்பட்டு கிராமத்தில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இம்மேம்பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டது.
தற்போது விவசாயிகளும், பொதுமக்களும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு காரணிபேட்டை பேருந்து நிறுத்தம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும்,தமிழக முதல்வரும் போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் மீண்டும் ஒரு தரமான மேம்பாலத்தை கட்டித் தர வேண்டும். இதன் அருகில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக தரம் உயர்த்தி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.