பாம்பு கடித்து ஏழு வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளுடன் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்ற வாரம் தான் திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரையும் பாம்பு கடித்ததில் அடுத்தடுத்த சில நாட்களில் இருவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தின் காயம் ஆறுவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிக்கும் மணி எல்லம்மாள். இவர்களுக்கு 7 வயது நிரம்பிய மகன் உள்ளான். இவர்கள் அதே பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு வருகிறனர்
நேற்று வழக்கம்போல அவர்களுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்பு அவருடைய மகனை கடித்துவிட்டு மகன் மேலே படுத்து இருந்ததை கண்ட அவரது தந்தை மணி , அந்த இரண்டு பாம்பையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளுவர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் கையில் பாம்பு எடுத்துக் கொண்டு தன் மகனுடன் சிகிச்சைக்கு வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்பின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், மூன்று நாட்களுக்கு முன்பு தான் திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் ஒரே குடும்பத்தை சார்ந்த இரண்டு சிறுவர்களை பாம்பு கடித்ததில் இரண்டு சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிர்ழந்தனர். அந்த சம்பவத்தை அடுத்து தற்போது திருத்தணியில் சிறுவனை பாம்பை கடித்துள்ளது. பாம்புக்கடி என்பது தற்போது தொடர் கதையாக உள்ளது என்று கூறினர்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் தாலுகா பகுதிகளிலும் பாம்பை பிடிக்கும் மையங்களை அமைத்து பாம்புகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனை மட்டுமன்றி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தடை இன்றி பாம்பு கடி மருந்து இருப்பு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்துகள் இருப்பு உள்ளது என்பதை தெரிந்து இருந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் உள்ளன. இதனை அரசும் சுகாதார அமைச்சரும் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.