ஆவாஜிபேட்டையில் கிடைத்த கை உருளை வெடிகுண்டு.. நிபுணர்கள் குழு சோதனை..
திருவள்ளூர் மாவட்டம், ஆவஜிபேட்டையில் கண்டெடுக்கப்பட்ட கை உருளை வெடிகுண்டை காலி மைதானத்தில் வைத்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்துள்ள ஆவாஜி பேட்டையைச் சேர்ந்தவர் குப்பன். இவர், கடந்த 4 ஆம் தேதி தனது மாட்டை கட்டுவதற்காக குடியிருப்புகளுக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் கொம்பு நடுவதற்கு குழு தோன்டினாராம். அப்போது சுமார் ஒரு மீட்டர் அளவு கொண்ட கை உருளை குண்டு ஒன்று குப்பன் பார்வையில் தென்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினருக்கு குப்பன் அளித்த தகவலின் பெயரில் போலீஸார் அந்த கை உருளை குண்டை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். மேலும், அந்த வெடிகுண்டை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சுற்றி மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வந்தது.
மேலும், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து ஆய்வாளர் தலைமையில் வந்த நான்கு பேர் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் அந்த கை உருளை குண்டை மெட்டல் டிடக்டர் மற்றும் வெடிகுண்டு சோதானை செய்யும் கருவிகள் மூலம் முழு சோதனை செய்தனர்.
அந்த குண்டு தற்போது உள்ள தன்மை குறித்து சோதனை செய்த பிறகு, பத்திரமாக திருவள்ளூர் அருகே மணவாள நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டுச் சென்றனர். ஏற்கெனவே மாலந்தூர் பகுதியில் கிடைக்கப் பெற்ற ராக்கெட் வெடிகுண்டு ஒன்று மணவாளநகர் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதே இடத்தில் தற்போது கிடைக்கப்பட்ட உருளை வெடிகுண்டையும் போலீஸார் பாதுகாப்பான முறையில் வைத்து உள்ளனர்.