திருவள்ளூர் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

திருவள்ளூர் அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது;

Update: 2021-09-07 05:10 GMT

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சந்தானராஜ் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி(45). இவர் மீஞ்சூரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (42). இவர் சென்னை, அயனாவரத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அழகர்சாமி தனது 2வது மகளை அழைத்துக்கொண்டு  மீஞ்சூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் விட்டுவிட்டு பிறகு தான் நடத்தி வரும் பேக்கரிக்கு சென்றுவிட்டார்.

வழக்கம்போல் பாக்கியலட்சுமி வேலைக்கும், மூத்த மகள் கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். இதனையடுத்து நேற்று மாலை பாக்கியலட்சுமி திரும்பி வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 26 சவரன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது

இதுபற்றி அழகர்சாமி  செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று  வீட்டில் பதிவாகி இருந்த  கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News