பெரியபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் வாக்குவாதம்
நிகழ்ச்சிகள் குறித்து முறையான தகவல்கள் தங்களுக்கு கொடுப்பதில்லை என குற்றம் சாட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
பெரியபாளையத்தில் நடைபெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இருதரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நிர்வாகிகள் பேசி கொண்டிருந்த போது ஒருதரப்பினர், மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள் குறித்து முறையான தகவல்களை தங்களுக்கு கொடுப்பதில்லை என குற்றம் சாட்டியதால், இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறும் சூழல் உருவானது. இதனால், கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.
இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தடுத்து மாவட்ட செயலாளர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து அமைதி திரும்பியது. மாவட்ட செயலாளர் முன்னிலையில் ,கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முற்பட்ட சம்பவத்தால் செயற்குழு கூட்டத்தில் பதற்றமும் பரபரப்பு நிலவியது. திமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற இந்த சலசலப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.