மின்சாரம் தாக்கி ஐந்தாம் வகுப்பு மாணவன் பலி.
பெரியபாளையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்
பெரியபாளையம் அருகேதண்டலம் மாம்பேடு காலனி பகுதி சார்ந்த 5- ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார்(40) இவர் பொன்னேரியில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நித்தீஷ்(10) . இவர் தண்டலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 5 - ம் வகுப்பு படித்து வந்தார். மிலாடி நபி காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் மாணவன் நித்தீஷ் அருகே உள்ள கயடை என்ற கிராமத்தில் சக மாணவர்களுடன் அங்குள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள மரத்தின் மீது ஏறி அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேலே சென்றார்.
மின்கம்பம் ஒன்று கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்தது. மாணவன் நித்தீஷ் அறியாமல் அதைப் பிடித்து ஏறிய போது அதிலிருந்து மின்சாரம் மாணவனை தாக்கியதால் மயங்கி அங்கே கீழே விழுந்துள்ளார், இதையறிந்த சகமாணவர்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவன் நித்தீஷை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து நிந்தீஷின் தந்தை குமார் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் நித்தீஷின் உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஊத்துக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிந்து மின்சாரம் தாக்கி மாணவன் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தினார். மின்சாரம் தாக்கி மாணவர இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.