அரசு பேருந்து விபத்து : பெண் உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்..!
சோழவரத்தில் அரசு பேருந்து தனியார் பெட்ரோல் பங்க் சுவர் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
சோழவரம் அருகே அரசு பேருந்து தனியார் பெட்ரோல் பங்க் சுற்றுச் சுவர் மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5.பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அரசு பேருந்து ஒன்று சென்னை-கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து சோழவரம் பைபாஸ் சாலை சென்றபோது சாலையின் குறுக்கே ஒரு வாகனம் வந்ததை பார்த்த பேருந்து ஓட்டுநர் எத்திராஜ் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி பேருந்து சர்வீஸ் சாலையை விட்டு அருகில் இருந்த தனியார் பெட்ரோல் பங்க் சுவரில் பலமாக மோதியதில் பேருந்தில் பயணம் செய்த பெரியபாளையம் ஆரணி அருகே உள்ள வடக்கு நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா (வயது- 45 ) தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த சுதாவின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் காயமடைந்த 5 பேரையும் அதே சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.