கிணற்றில் விழுந்த புள்ளி மான் : தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்பு..!

திருவள்ளூர் அருகே, குடிநீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் கிணற்றுக்குள் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2023-04-16 04:15 GMT

கிணற்றில் இருந்த மீட்கப்பட்ட மான்.

திருவள்ளூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டில் விடுவித்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், பூண்டி காப்புகாட்டில் அதிக அளவில் மான்கள் மற்றும் முயல்கள் உள்ளன. கோடை காலம் என்பதால், காடுகளில் உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து தண்ணீர் மற்றும் உணவு தேடுகின்றன.

அவ்வாறு உணவும், குடிநீரும் தேடி வழிமாறி மான்கள் காட்டை விட்டு வெளியேறி கிராம பகுதியில் சுற்றித்  திரிவது வழக்கமாவிட்டது. இந்நிலையில் புள்ளி மான் ஒன்று தண்ணீர்  தேடி காட்டை விட்டு வெளியேறி விளாப்பாக்கம் கிராமத்தில் புகுந்தது.

மானைப்பார்த்த  அங்குள்ள தெரு நாய்கள் துரத்திச் சென்றன. அப்போது வயல் பகுதியில் 50 அடி ஆழமுள்ள தடுப்பு சுவர் இல்லாத விவசாய கிணற்றில் புள்ளி மான் தவறி விழுந்தது. கிணற்றில் 3 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால் கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருக்கு போராடி வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் இது குறித்து, திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, புள்ளி மானை கிணற்றில் இருந்து பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மானை  திருவள்ளூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று பரிசோதித்த வனத்துறையினர் மானை பூண்டி காப்புக்காட்டு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Tags:    

Similar News