திருவள்ளூர் அருகே செல்போன் கடை ஊழியர்களை கடத்தி மிரட்டிய 6 பேர் கைது
திருவள்ளூர் அருகே செல்போன் கடை ஊழியர்களை கடத்தி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ் (25). இவரது கடையில் வேலை பார்த்து வந்த முகம்மது இப்ராஹிம் மற்றும் சாந்தகுமார் ஆகிய 2 பேரும் நேற்று முன் தினம் இரவு கடையை மூடிவிட்டு சாவியை முதலாளியிடம் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் சந்தோஷ்குமார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாக இரு சக்கர வாகனத்தில் கடத்தி திருவள்ளூர் என்ஜிஓ காலனியில் உள்ள பார்க்கில் உட்கார வைத்து செல்போன் கடை உரிமையாளரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டுவரச் சொல்லி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து கடை உரிமைாயளர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் ரகசிய தகவல் அளித்ததின் பேரில் அங்கு மாறு வேடத்தில் சென்ற போலீசார் கடை ஊழியர்களை கடத்தி வைத்திருந்த 6 பேரை மடக்கி கைது செய்தனர்.
விசாரணையில் பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(23), இஸ்மாயில் மகன் அன்சார் ஷெரிப் (23), கணேசன் மகன் உதயா(22), பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் பிராங்க்ளின் (19), பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாபு மகன் ஆகாஷ் (19), மற்றும் கணேஷ் மகன் மோகன் (26) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதில் ஆகாஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.