வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா; அலுவலகம் மூடல்
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக கணக்காளர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அலுவலகம் மூடப்பட்டது
திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது அலை கொரோனா நோய் தோற்று வேகமாக பரவி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 1385 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் கணக்காளர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்றுநோய் கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. இன்றும் நாளையும் எந்த பணிகளும் நடைபெறாது என்றும், வருகிற திங்கட்கிழமை முதல் மீண்டும் பணிகள் தொடரும் எனவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.