ஆவடி அருகே பாலவேடு கிராமத்தின் சுடுகாட்டில் மழைநீர் தேக்கம்
ஆவடி அருகே பாலவேடு கிராம சுடுகாட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் இறந்தவர் உடல்களை சாலையோரம் எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பாலவேடு சாஸ்திரி நகரில் நேற்று குமாரவேல் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தை பாலவேடு சுடுகாட்டில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாலவேடு சுடுகாடு இருக்கும் பகுதி சமீபத்தில் பெய்த மழை காரணமாக மழைநீர் சுடுகாட்டை சுற்றி முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக பாலவேடு கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் யாராவது உயிரிழந்தால் வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலை அருகே பிணத்தை எரிக்கும் அவலநிலை கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவடி தாலுகா அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலவேடு கிராமப்பகுதியில் உள்ள இந்த சுடுகாட்டை முறையாக பராமரித்து அங்கு சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்தி சுடுகாடு சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.