4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தர்ம அடி கொடுத்த பெற்றோர், உறவினர்..!
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோர் மற்றும் உறவினர் தர்ம அடி கொடுத்தனர்.
ஆவடி அருகே பிரபல தனியார் பள்ளியின் நடன ஆசிரியர் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து தனியார் பள்ளியின் நடன ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பிரபலமான ஒரு வித்யாலயா பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிபவர் வேணுகோபால். இவர் அதே பள்ளியில் பயின்று வரும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்தது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் வேணுகோபாலையும் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர்.
பின்னர் பெற்றோரும், உறவினர்களும் சேர்ந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பெற்றோர் அடித்ததால் காயமடைந்த நடன ஆசிரியர் வேணுகோபாலை, காவல்துறையினர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடன ஆசிரியருக்கு தர்ம அடி கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
எத்தனை முறை போக்ஸோவில் வழக்குகள் பதிவானாலும் கூட சின்னஞ்சிறு குழந்தைகளிடம் பாலியல் தொல்லை என்பது அனுமதிக்க முடியாத மற்றும் மன்னிக்கமுடியாத குற்றம். குழந்தை என்று கூட சிந்திக்காத அவன் ஆசிரியராக இருப்பதற்கு தகுதியற்றவன். அவனுக்கும் குழந்தைகள் இருக்கின்றனரா இல்லையா என்று தெரியவில்லை. மனித மிருகமாக செயல்பட்ட இவனைப்போன்றவர்களை இந்த சமூகம் மன்னிக்கக்கூடாது. அவன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கிடக்க சட்டம்தான் வழிவகை செய்யவேண்டும்.
ஆசிரியர் என்றால் அறப்பணி செய்வோர். நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகள். மரியாதைக்குரியோர். மாதா, பிதா,குரு என்ற வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர்கள். அறிவை மட்டுமல்ல, பணிவு, பண்பாடு போன்ற ஒழுக்கநெறிகளை கற்றுக் கொடுக்கவேண்டிய ஆசிரியர்கள் இதைப்போன்ற அநாகரிக செயல்களை செய்வது ஒட்டுமொத்த ஆசிரிகளுக்கே இழுக்கு ஏற்படும் நிலை. என்று திருந்துவார்கள் இவர்களைப்போன்ற கயவர்கள்?