திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகளில் 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை துவக்கம்

வெள்ளகோவில் ரேஷன் கடையில் 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை துவங்கியது.

Update: 2022-11-06 08:13 GMT

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், இனி 2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர் கிடைக்கும்.

கேஸ் சிலிண்டரை எளிதாக பெற்று பயன்பெறும் வகையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுகிறது. 

கிராமப்புறங்களில் எரிவாயு சிலிண்டர் பயன்பட்டை அதிகப்படுத்தவும், எரிவாயு சிலிண்டர் எளிதில் கிடைக்கும் வகையிலும் நியாயவிலை கடைகளில் எரிவாயு கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 5.32 கோடி எண்ணிக்கையில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலமாக, கிராம மக்கள் அதிக பயனடைவர். 

பாரத் பெட்ரோலியன், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள், மாநில அரசு இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படுவதை போலவே, 'பயோமெட்ரிக்' மூலம் எரிவாயு விநியோகமும் செய்ய முடியும் என்பதால் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு, மானிய விலையில் எளிதாக சிலிண்டரை வழங்க முடியும். இந்த சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்தால் உரிய நபருக்கு மானியத்துடன் சிலிண்டர் கிடைக்கிறது.

5 கிலோ கொள்ளளவு கொண்ட ஒரு சிறிய சிலிண்டரின் விலை 375 ரூபாய். அதாவது எரிவாயு மட்டும் நிரப்பி தரப்படும். புதிதாக வாங்குவதற்கு 1,400 ரூபாய் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இதைவிட கூடுதலாக வாய்ப்புள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். 

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

5 கிலோ, 2 கிலோ எடை கொண்ட அனல் மற்றும் தனல் என்ற பெயர் கொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் 6-ம்தேதி, சென்னையில் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் நியாய விலைக் கடைகளில் 5 கிலோ எடையுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர்கள் விற்பனை, சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பின்னலாடை மற்றும் எண்ணெய் ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட பலருக்கு இந்த சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும்.

நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்களை பொறுத்தவரை முகவரிக்கான ஆதாரம் தேவையில்லை. அடையாளச் சான்று மட்டுமே போதுமானது, இதன் பெயர் தனல் 2 கிலோ மற்றும் அனல் 5 கிலோ என அழைக்கப்படும். பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் முத்துகுமார், வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் கனியரசி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், துணைப்பதிவாளர் பழனிச்சாமி, தி.மு.க.ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி முருகானந்தன், வீரசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News