நெல்லையில் வெடிபொருள் வெடித்து பெண் காயம்: போலீசார் விசாரணை

நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் பாழடைந்த வீட்டில் வெடிபொருள் வெடித்ததில் பெண் காயம்.

Update: 2022-05-09 15:27 GMT

சுத்தமல்லியில் வெடிபொருட்கள் வெடித்தில் காயமடைந்த மீனாட்சி.

நெல்லை அருகே பாழடைந்த வீட்டில் வெடிபொருட்கள் வெடித்ததில் பெண்ணுக்கு காயம். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் காவல் நிலையம் அருகே பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டிற்கு அருகே அந்த பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற இளம்பெண் தனது வீட்டுக்கு தேவையான மணலை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மணலுக்குள் புதைந்து கிடந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததில் மீனாட்சி காயமடைந்தார்.  நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள் மீனாட்சி மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கோவில் திருவிழாவுக்கு பயன்படுத்திய வெடிக்காத வெடி பொருட்கள் மண்ணில் வைத்திருந்ததாகவும், வெயிலில் உராய்வு காரணமாக அது வெடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும் சுத்தமல்லி பகுதியில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்கனவே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் இந்த சூழ்நிலையில் இன்று மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருள் வெடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபத்தில் தான் சுத்தமல்லி பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் தாக்கப்பட்டார். இதுபோன்ற சூழலில் காவல் நிலையம் அருகில் வெடி பொருள் வெடித்துள்ளதால் போலீசார் இச்சம்பவத்தில் அதிக கவனம் செலுத்தினர். அதன்படி வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று வெடித்த வெடிபொருள் நாட்டு வெடிகுண்டு வகையை சார்ந்ததா அல்லது பட்டாசு வகையை சார்ந்ததா என்பதைப்பற்றி தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News