12 முதல் 14 வயது சிறார்களுக்கு இரண்டு தவணையாக தடுப்பூசி முகாம் தொடக்கம்

நெல்லை மாவட்டத்தில் 16 ம் தேதி முதல் நடுநிலை உயர்நிலை மேல்நிலைபள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-03-16 16:00 GMT

தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 16.03.2022 முதல் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிப்பணி 16.01.2021 முதல் போடப்பட்டு வருகிறது. 03.01.2022 முதல் 15-18 வயது சிறார்களுக்கும், 10.01.2022 முதல் சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றாநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (16.03.2022) முதல் 12-14 வயது சிறார்களுக்கு இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் முதல் தவணை பெற்று 28 நாட்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் பயனாளிக்கு 12 வயது நிறைவடைந்திருப்பதை உறுதி செய்த பிறகு தடுப்பூசி போட வேண்டும். 12 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கூடாது. நமது மாவட்டத்தில் 48400 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பூஸ்டர் தவணை : முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணை நோய் கொண்டோர் ஆகியோருக்கு 10.01.2022 முதல் முன்னெச்சரிக்கை தவணை ( பூஸ்டர் ) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதை கடந்த அனைவருக்கும் புதன்கிழமை முதல் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும். 

இத்தவணையானது இரண்டாவது தவணை பெற்றுகொண்டு 9 மாதங்கள் முடிவடைந்த பின் செலுத்தப்படும், மேலும் முதல் இரு தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதேவகை தடுப்பூசிதான் முன்னெச்சரிக்கை தவணையாகவும் செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News